வீரகேசரி இணையம் 3/26/2009 3:57:30 PM - அருட்சகோதரர் பப்ரிஸ்ற் குரூஸ் அவர்கள் கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 8.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி காற்றோடு கலந்து சோகத்தைச் சுமந்து வந்தது.
சிறந்த ஆளுமையும், உயர்ந்த மனிதநேயப் பண்புகளும், அகன்ற கல்விப்புலமையும் கொண்ட இந்தத் தமிழ்க் கத்தோலிக்க துறவியின் மரணச் செய்தியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மத்தியில் சோகத்தின் சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளது. அருட்சகோதரர் பப்ரிஸ்ற் குரூஸ் அவர்கள் மன்னார் மண்ணின் மைந்தர். ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவர். மனித நேயம் மிக்க பண்பாளர். அறிவுச்சுடர், நாவன்மை மிக்க சிறந்த பேச்சாளர், இறை மனித உறவுக்கு இலக்கணம் வகுத்தவர், அனைத்து மக்கள் மத்தியிலும் இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தவர்.
பல ஆங்கில நூல்களின் ஆசிரியர், டிலாசால் சபைச் சகோதரர்களின் முகவரி! இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட அருட்சகோதரர் பப்ரிஸ்ற், மன்னார் மாவட்டத்தின் முதுபெரும் கத்தோலிக்க கிராமமாகிய வங்காலையைச் சேர்ந்த திரு. திருமதி செபஸ்ரியான் குரூஸ் தம்பதியினருக்கு மகனாக 01.06.1939இல் பிறந்தார். மன்னாரில் அக்காலத்தில் பணிபுரிந்த புனித சூசையப்பர் சபைத் துறவிகளின் (Society of St. Joseph) வழிகாட்டலில் இவர் வளர்ந்தார். தனது இடைநிலைக்கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி ஆகியவற்றை அக்காலத்தில் மன்னாரில் புனித சவேரியார் ஆங்கிலக் கல்வி நிர்வாகத்தை நடத்திய அருட்தந்தையர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து கல்லூரியைப் பொறுப்பேற்ற புனித டிலாசால் சபைச் சகோதரர்கள் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நிறைவுசெய்தார். இந்த டிலாசால் துறவற சபைச் சகோதரர்களின் அன்பும் அரவணைப்பும் ஆளுமைப் பண்புகளும் ஒழுக்கநெறிகளும் இறைபக்தியும் இளைஞர் பப்ரிஸ்ற்ரைக் கவர்ந்திழுத்ததில் ஆச்சரியமில்லை. உயர்கல்வி மற்றும் சிறந்த உத்தியோகம் போன்றவற்றிற்கான வாய்ப்புக்கள் ஒருபுறம்! துறவற அழைப்பு மறுபுறம்! சிந்தித்துச் செயற்பட்டு முடிவெடுத்தார்.
டிலாசால் சபை துறவியாகும் எண்ணத்துடன் தனது 17ஆவது வயதில் டிலாசால் சகோதரர்களின் துறவற பயிற்சியகம் நோக்கி அடியெடுத்து வைத்தார். தனது 20ஆவது வயதில் முதல் அர்ப்பணத்தையும் 25ஆவது வயதில் நித்திய அர்ப்பணத்தையும் செய்தார். இலங்கையின் முதலாவது டிலாசால் சபைத் துறவி என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.
இவரது அறிவுத்திறனையும், ஆளுமை விருத்தியையும், இறைபக்தியையும், டிலாசால் துறவற சபையின் மட்டில் இவர் கொண்டிருந்த பற்றையும் இனங்கண்டுகொண்ட சபையின் தலைமைப் பீடத்தினர் பல்வேறு துறைகளிலும் இவர் உயர்கல்வியை மேற்கொள்ள இவரை ஊக்குவித்தனர். அதன்படி 1965இல் கொழும்பில் இதழியலில் டிப்ளோமா பயிற்சி நெறியையும், 1969இல் பிரான்ஸ் நாட்;டுப் பாரிஸ் நகரில் மறைக்கல்வியில் டிப்ளோமா பயிற்சி நெறியையும், 1973இல் பாகிஸ்தான் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் ஆகிய மொழிகளில் இளங்கலைமாணிப் B.A)பட்டத்தையும் பெற்றுக்கொண்டார் 1977இல் உரோமாபுரியில் லசாலியன் ஆன்மீகத்தில் (Lasalian Spirituality) விசேட பயிற்சியை மேற்கொண்டார். 1989இல் பெங்கரில் இறையியலில் மூன்று மாதப் பயிற்சியை மேற்கொண்டார். 1991இல் கொழும்பில் (I.S.F.A.) மறைக்கல்வியில் முதுகலைமாணி (M.A) பட்டத்தையும் இறுதியாக 1993இல் பிலிப்பைன்ஸ் - மணிலாவில் கல்வியியலில் கலாநிதிப்பட்டத்தையும் (Ph.D) பெற்றுக் கொண்டார். அத்துடன் இவரது கல்வி முடிவடைந்துவிடவில்லை. “ஓர் ஆசிரியர் என்பவர் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்†என்பதைத் தனது உள்ளார்ந்த கருத்தியலாகக் கொண்டு தொடர்ந்து அறிவுத்தேடலில் ஈடுபட்டு வந்தார்.
இவர் பன்மொழி வித்தகராகத் திகழ்கின்றார். 14 வருடங்கள் பாகிஸ்தானில் மறைபரப்பாளராகப் பணியாற்றிய இவர் உருது, பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிகளில் சிறந்த பாண்டித்தியம் பெற்றுள்ளார். அத்துடன் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், பிரஞ்ச், ஜேர்மன் ஆகியவற்றில் சிறந்த புலமை மிக்கவர். இத்தாலியம், ஸ்பானியம் ஆகிய மொழிகளில் ஓரளவு தேர்ச்சி உடையவர். இதுவரை இவர் உருது மொழியில் மூன்று நூல்களையும், ஆங்கில மொழியில் ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். இவரது Lilies and Roses நூல் ‘லில்லிகளும் றோசாக்களும்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெளிவரும் ஆங்கில வாராந்த கத்தோலிக்க பத்திரிகையான த மெசஞ்சர் ; (The Messenger) என்ற பத்திரிகையில் இளைஞர்களுக்கான பகுதியில் “அருட்சகோதரர் பப்ரிஸ்ற் இளவயதினரோடு பேசுகிறார்†(“Brother Baptist Talks to Teen Agesâ€) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொடர் கட்டுரைகளை எழுதி பலரது பாராட்டையும் பெற்றார்.
இறக்கும்வரை இவர் டெய்லி நியூஸ், டெய்லி மிரர், தி ஐலண்ட் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் இன்றைய இனவன்முறைச் சூழலில் சமாதானத்திற்கான தேடலாக தன் ஆழ்ந்த கருத்துக்களை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தி எழுதி வந்தார். நடுநிலையாகச் சிந்திக்கக்கூடிய சிங்கள புத்திஜீவிகள் மத்தியில் இவரது ஆழமான, தத்துவார்த்தமான கருத்துக்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின என்பதே உண்மை. இவர் உலக மன்சாட்சியின் குரலாக உண்மைக்காகப் போராடிய பேனாப்போராளி ஆவார். சமாதானம், ஒப்புரவு ஆகிய உயர்ந்த விழுமியங்களில் ஆழமான நம்பிக்கைகொண்டு இவற்றையே தன் வாழ்வின் கொள்கையாகவும் தாரக மந்திரமாகவும் இறுதி மூச்சுவரை வாழ்ந்து வந்தவர். ஒப்புரவும் சமாதானமுமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்பதில் இவர் அசைக்கமுடியாத திடமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவரது துறவற வாழ்வுக்காலத்தில்; இவர் தடம்பதித்த பணித்தளங்களோ பற்பல. 14 வருடங்கள் பாகிஸ்தானில் மறைபரப்பாளராக பணியாற்றிய காலத்தில் பாகிஸ்தானிலுள்ள வைசலாபாத் மறைக்கல்விப் பயிற்சி நிலையத்தின் இயக்குனராக 8 ஆண்டுகளும் தமது டிலாசால் சபையின் பிராந்திய முதல்வராக 6 ஆண்டுகளும் பணியாற்றினார். மூன்று தடவைகள் இவர் இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிலாசால் சகோதரர்களின் மாகாண முதல்வராகவும் ; (Provincial) இரண்டு தடவைகள் இலங்கை துறவறசபை முதல்வர்கள் பேரவையின் தலைவராகவும் (ஊ.ஆ.சு.ளு – Pசநளனைநவெ ழக வாந ஊழரnஉடை ழக ஆயதழச சுநடபைழைரள ளுரிநசழைசள) சிறப்பாகப் பணியாற்றினார்.
1994இல் கொழும்பில் லசாலியன் ஆங்கில கல்வியகத்தை (Lasallian English Academy) நிறுவி அதன் இயக்குனராக 7 ஆண்டுகள் அதனை திறம்பட நிர்வகித்து வந்தார் 1999இல் ‘சன்வோ’ (SUNFO) எனப்படும் ‘இலங்;கை – ஐக்கிய நாடுகள் சபை நட்புறவுச் சங்கத்தை’ இவர் ஏற்படுத்தி இறக்கும்வரை அதன் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலாற்றி வந்தார். இலங்கையில் சமாதானம் மற்றும் ஒப்புரவைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குகின்ற அமைப்பாக இச்சங்கம் திகழ்கின்றது. 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி உலக சமாதானத்திற்கான அனைத்துலக அமைப்பு “சமாதானத்தின் தூதுவர்†(Ambassador for Peace) என்ற விருதை வழங்கி இவரைக் கௌரவித்தது.
இத்தகைய சிறப்புப் பட்டங்களுக்கும் உயர் பதவிகளுக்கும் சொந்தக்காரரான அருட்சகோதரர் பப்ரிஸ்ற் அவர்கள் பணிவுடன் அனைத்துத் தரப்பினருடனும் சரளமாகப் பழகும் பண்பு கொண்டவர். மனித நேயத்தை மிகவும் போற்றி மதிப்பவர். பாரதியின் பாடலைப்போல் “யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய்†திகழ்ந்தார் என்றால் கூட அது மிகையாகாது. தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு தனது இறுதிக்காலத்திலாவது சேவை செய்யவேண்டும் என்ற தணியாத தாகம் இவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது. எனவே இவர் கடந்த சில வருடங்களாக மன்னாரில் இருந்துகொண்டு தனது கல்விச் சேவையை மன்னார் மண்ணுக்கு முழு மூச்சாக வழங்கிவந்தார். கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்படும் வரை இவரது கல்விச் சேவை மன்னாரில் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இவர் ஒரு கத்தோலிக்க துறவியாக விளங்கினாலும் வேற்று மதத்தவர், இனத்தவர், கற்றவர், கல்லாதவர், செல்வந்தர், ஏழைகள், பெரியோர், சிறியோர் போன்ற பலதரத்து மக்களுடனும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் பழகிவந்தார். அனைவருக்கும் இனிய நண்பராக விளங்கினார். இவரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவருமே இவரது அகன்ற ஆளுமைப்பண்புகளைக் கண்டு வியந்ததுண்டு. மனித நேயம்மிக்க ஒரு உயர்ந்த மானிடப் பிறவியை இந்த உலகம் இழந்துவிட்டது. இயேசுக்கிறிஸ்துவின் உயர்ந்த போதனைகளான மன்னிப்பையும் ஒப்புரவையும் தன் வாழ்வின் இலட்சியமாகக்கொண்டு சமரசத்திற்காகப் பாடுபட்டு உழைத்த இயேசுவின் உண்மைச் சீடனை ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்க திருச்சபை இழந்துவிட்டது. E-mail to a friend More photos about Final journey of Baptist Croos
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12327 |